Showing posts with label இறைவன். Show all posts
Showing posts with label இறைவன். Show all posts

Tuesday, December 15, 2020

இறைவனைத் தவத்தால் உணர முடியும்

ஏனோர் பெருமையை னாகினும் எம்இறை
ஊனேய் சிறுமையுள் உட்கலந் தாங்குளன்
வானோர் அறியும் அளவல்ல மகா
மாதேவன்
தானே அறியும் தவத்திற்கு உள்ளே.

மந்திரம் - 490

 விளக்கம்:

அனைத்து தெய்வங்களையும் விட மாபெரும் பெருமையை உடைய எமது இறைவன் வினைகள் கர்மாக்கள் மூலங்கள் கொண்ட குறைகள் நிறைந்த உயிர்களின் உடல்களிலும் கலந்து இருக்கின்றான். அதாவது எம் தலைவனான இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து அவற்றுள் விளங்குகின்றான். வானுலகத்திலுள்ள தேவர்களாலும் அறிய முடியாத அளவு இருக்கும் மகாதேவனாகிய அந்த இறைவனை உயிர்கள் தனக்குள் தவம் செய்து நமக்குள்ளேயே அறியலாம்.


Source : Thirumoolar

Monday, November 23, 2020

உச்ச இறைநிலையே சோதி!

வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதிகளில் ஒருவர். இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள் கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும், இறைவனை ஜோதி வடிவிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள். தான் வாழ்ந்த காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் வள்ளலார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மணியாய் மந்திரமாய் இருப்பது
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மந்திரமாய் மணியாய் இருப்பதை அருட்பா ஆறாம்திருமுறை "காட்சி களிப்பு"என்ற 41 வது தலைப்பில் 7வது பாடலில் ,
 மருந்தானை மணியானை வழுத்தா
         நின்ற மந்திரங்க
         ளானானை
         வானநாட்டு
விருந்தானை உறவானை நண்பினானை....
      என்று மருந்தாயும் மணியாயும் மந்திரமாயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இருந்து அருள்பாளிப்பதையும் நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

 திருமூலரின் சொல்லும் சோதியின் சிறப்பு

மந்திரம் -15

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்து ஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 

பொருள் : 
சிவன் உலகினைப் படைப்பவனாயும் அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அவற்றைக் கடந்து நிறைந்து விளங்குகிறான். திருவருள் சோதியாகயும் குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும் படைத்துக் காத்து அழித்து உயிர்களுக்கு வினையை ஊட்டுவிப்பான்.

திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான் என்று கூறியுள்ளார்.

எட்டாம் திருமுறையில், 29 திருவாசகம்- அருட்பத்து,  பாடல் முதலில்   "சோதியே சுடரே சூழொளி விளக்கே...." என்று
திரு.மாணிக்கவசகர் கூறியுள்ளார். 

சோதிப் பிழம்பானவனே! ஒளிப் பிழம்பில் உள்ள கதிர்களாய் உள்ளவனே! சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்ற வனே!  என்று பொழிப்புரையாகும்.

நம் சித்தர்கள், ஞானிகள் ஜோதியை ஆண்டவனாக அறிந்து கொண்டார்கள். அதை போல் நாமும் சித்தர்கள் எழுதியுள்ள மந்திரங்கள் படித்து உணர்ந்து, அருள்ளொளியால் முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு முயல்வோம்.

சர்வமும் அவனுக்குள் அடக்கம்.

Monday, November 2, 2020

உன்னையே நீ அறிந்தால்

"தன்னை யறிந்தருளே தாரகமாய் நிற்பதுவே 
உன்னை யறிதற் குபாயம் பராபரமே"

என்று தாயுமானவர் கூறுவதுபோல் தன்னைத் தானே அறிவது என்பது எப்படி?

பருஉடலுக்குள் அதிநுட்பமாக இருக்கும் மனம், சித்தம், புத்தி இவைகளுக்கு மேம்பட்டதாக இருக்கும் அகங்காரம், இதயத்தின் நுட்பம், மூளையின் தன்மை போன்ற குணங்களை அறிந்து கொள்வதே தன்னை அறிவதாகும். மனம், சித்தம், புத்தி என்பவைகள் ஒன்றாகி, ஒன்றில் ஒன்றாக இருந்தாலும், புரிந்து கொள்ள வெவ்வேறாக அலசும்படியதாகின்றது. அத்துடன் அனைத்திற்கும் ஆதாரமாக, குணங்களற்ற ஒன்றாக இருக்கும் ஆன்மாவின் (உயிரின்) இயக்கத்தை அறியும்போது, தன்னை அறிவதோடு தலைவனை (பேரான்மாவை)யும் அறிந்து, பேரறிவைப் பெறும்படியாகிறது.

உடல், உடல் சம்பந்தப்பட்ட கரணங்கள் யாவும் பூமியான உலகத்தை சார்ந்ததாகவும், சீவன் என்பது சூக்கும உலகத்தை சார்ந்ததாகவும் இருக்கின்றது. நான், நீ, தான் என்பதெல்லாம் அகங்காரத்தின் அகம்பாவமே. உடல் இதயத்தின் வசமாகும்.

இதயம் அசைந்தாலே உடல் முழுமையும் அசைவுறும் இதயம் மலர்ந்தால் மகிழ்வும், இதயம் சுருங்கினால் கோபமும் உண்டாகின்றது. இருதயமான மாமிசத் துண்டினுள், நுண்ணிய அந்தரங்கத்தில் இருக்கும் நான் எனும் தன்மையையும், இயற்கை குணத்தையும் அறிவதே, கடவுளை அறிவதாகும்.
 
திருமூலர் கூறுகிறார்:

"தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில் 
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற 
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே."

திருமந்திரம் 2055

சற்குரு திருமூலநாதரின் கூற்றுப்படி; தானே சிவம் என்று தன்னை உணர்ந்து கொண்ட உண்மையான குருநாதனின் சந்நிதி முன்பாக அமரும்போது, தானே தன்னை அறிந்துணரும் மனப் பக்குவம் கைகூடில், அவர் தன் ஆன்மாவையே சிவம் என்று உணரும் பெருமை பெற, உடம்பினுள் இருந்தே, தானே சிவம் என்ற அனுபவம் ஏற்பட்டு தெளிந்தறிய முடியும்.

பிரபுலிங்கலீலை கூறுகையில்:

"தன்னைச்சிவமென்றறிந்தவனேயறிந்தான்றன்னையுண்மையாத் 
தன்னைச் சிவமென் றறியாதா னறியானென்றுந் தன்னுண்மை 
தன்னைச் சிவமென் றறிந்தவன்றே தாழ்வாம் பாசந்தனை நீப்பான் 
தன்னைச் சிவமென் றறியாதான் றனக்குப் பிறப்பே துணையாகும்."

(படிக்க நன்றாக இருக்கு இல்லையா?)

திருநாவுக்கரசரும், 'விதியை மதியால் வெல்லலாம், ஊடே ஈசன் அருள் இருந்தால்...'' என்றார்

தன்னைத்தான் அறிவதாவது இறைவனை அறிவதாகும் இறைவனை தம்முள்ளே இருத்தியவர்களின் செயலால் வையகம் திர மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழ வழிவகை செய்யப்பட்டு, மனிதன் உடலையும், உடலை இயங்கச் செய்யும் உயிரின் மேன்மை களையும், மனதின் மாண்புகளையும் துல்லியமாக அறிந்து, மேம்பட்டு வாழும் கலையாக நிறைவாக வாழ்ந்து பிறவா நிலையை எய்த முடியும்.

உன்னையே நீ அறிந்தால். அது இறைவனை அறிந்ததாகும்..

Source: புத்தகம்- அகமுகநாதர் குருஜி - திருமூலரின் சமாதியோகம்.