Monday, November 2, 2020

உன்னையே நீ அறிந்தால்

"தன்னை யறிந்தருளே தாரகமாய் நிற்பதுவே 
உன்னை யறிதற் குபாயம் பராபரமே"

என்று தாயுமானவர் கூறுவதுபோல் தன்னைத் தானே அறிவது என்பது எப்படி?

பருஉடலுக்குள் அதிநுட்பமாக இருக்கும் மனம், சித்தம், புத்தி இவைகளுக்கு மேம்பட்டதாக இருக்கும் அகங்காரம், இதயத்தின் நுட்பம், மூளையின் தன்மை போன்ற குணங்களை அறிந்து கொள்வதே தன்னை அறிவதாகும். மனம், சித்தம், புத்தி என்பவைகள் ஒன்றாகி, ஒன்றில் ஒன்றாக இருந்தாலும், புரிந்து கொள்ள வெவ்வேறாக அலசும்படியதாகின்றது. அத்துடன் அனைத்திற்கும் ஆதாரமாக, குணங்களற்ற ஒன்றாக இருக்கும் ஆன்மாவின் (உயிரின்) இயக்கத்தை அறியும்போது, தன்னை அறிவதோடு தலைவனை (பேரான்மாவை)யும் அறிந்து, பேரறிவைப் பெறும்படியாகிறது.

உடல், உடல் சம்பந்தப்பட்ட கரணங்கள் யாவும் பூமியான உலகத்தை சார்ந்ததாகவும், சீவன் என்பது சூக்கும உலகத்தை சார்ந்ததாகவும் இருக்கின்றது. நான், நீ, தான் என்பதெல்லாம் அகங்காரத்தின் அகம்பாவமே. உடல் இதயத்தின் வசமாகும்.

இதயம் அசைந்தாலே உடல் முழுமையும் அசைவுறும் இதயம் மலர்ந்தால் மகிழ்வும், இதயம் சுருங்கினால் கோபமும் உண்டாகின்றது. இருதயமான மாமிசத் துண்டினுள், நுண்ணிய அந்தரங்கத்தில் இருக்கும் நான் எனும் தன்மையையும், இயற்கை குணத்தையும் அறிவதே, கடவுளை அறிவதாகும்.
 
திருமூலர் கூறுகிறார்:

"தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படில் 
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற 
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே."

திருமந்திரம் 2055

சற்குரு திருமூலநாதரின் கூற்றுப்படி; தானே சிவம் என்று தன்னை உணர்ந்து கொண்ட உண்மையான குருநாதனின் சந்நிதி முன்பாக அமரும்போது, தானே தன்னை அறிந்துணரும் மனப் பக்குவம் கைகூடில், அவர் தன் ஆன்மாவையே சிவம் என்று உணரும் பெருமை பெற, உடம்பினுள் இருந்தே, தானே சிவம் என்ற அனுபவம் ஏற்பட்டு தெளிந்தறிய முடியும்.

பிரபுலிங்கலீலை கூறுகையில்:

"தன்னைச்சிவமென்றறிந்தவனேயறிந்தான்றன்னையுண்மையாத் 
தன்னைச் சிவமென் றறியாதா னறியானென்றுந் தன்னுண்மை 
தன்னைச் சிவமென் றறிந்தவன்றே தாழ்வாம் பாசந்தனை நீப்பான் 
தன்னைச் சிவமென் றறியாதான் றனக்குப் பிறப்பே துணையாகும்."

(படிக்க நன்றாக இருக்கு இல்லையா?)

திருநாவுக்கரசரும், 'விதியை மதியால் வெல்லலாம், ஊடே ஈசன் அருள் இருந்தால்...'' என்றார்

தன்னைத்தான் அறிவதாவது இறைவனை அறிவதாகும் இறைவனை தம்முள்ளே இருத்தியவர்களின் செயலால் வையகம் திர மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழ வழிவகை செய்யப்பட்டு, மனிதன் உடலையும், உடலை இயங்கச் செய்யும் உயிரின் மேன்மை களையும், மனதின் மாண்புகளையும் துல்லியமாக அறிந்து, மேம்பட்டு வாழும் கலையாக நிறைவாக வாழ்ந்து பிறவா நிலையை எய்த முடியும்.

உன்னையே நீ அறிந்தால். அது இறைவனை அறிந்ததாகும்..

Source: புத்தகம்- அகமுகநாதர் குருஜி - திருமூலரின் சமாதியோகம்.

No comments:

Post a Comment