அதுபோல் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப் பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர் உதாரணமாக விளங்குகிறது.
10ம் திருமுறையில் திருமூலரால் பாடப்பட்ட 3047 பாடல்களில் உள்ள முதல் திருமந்திரமும் அதன் தெளிவுரையும் கீழே படிக்கலாம்.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றனுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந்து எட்டே.
பொருள்:
* சிவன் ஒருவனே,
* சத்தியோடு இரண்டாய்,
* பிரம்ம, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து,
* நான்கு மறைகள்(அறம், பொருள், இன்பம், வீடு) உணர்த்தும் உண்மைகளை விளங்க செய்து,
* மெய், வாய், கண், மூக்கு செவியாகிய ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய்,
* மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும்,
* அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி,
* நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.
இறைவன் ஒன்றே என்றும், பிரபஞ்சத்தின் படைப்பிற்காகவும் அதன் இயக்கத்திற்காகவும், அவரது ஆற்றல் சக்தியாகவும், ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு பரிணாமமித்து இருக்கின்றன என்பதை ஒன்று, இரண்டு என்ற வரிசையில் அழகாகவும், தெளிவாகவும் கூறியுள்ளார்.
சர்வமும் அவனுக்குள் அடக்கம்
Source: தினமலர், பேரின்பம் உன்னுள்ளே
No comments:
Post a Comment