Wednesday, April 9, 2014

மனம் கெட்டுவிட்டால் குணமும் கெட்டு விடுகிறது

மனம் கெட்டுவிட்டால் குணமும் கெட்டு விடுகிறது. குணம் கெட்டு விட்டால் வாழ்வே கெட்டு விடும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, யோக சாதனைகள் மற்றும் தியானத்திற்கும் பொருந்தும். மனம் கெட்டுப் போவதற்கு காரணமாக உள்ள குற்றங்கள் பதிமூன்று என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. அவை ராகம், காமம், துவேஷம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இரட்சியம், அசூயை, டம்பம், தர்ப்பம், ஆங்காரம் என்பவையாகும்.

ராகம் - ஆண்மை என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் வேறு விதமாகப் பொருள் கூறுவோம். ஆனால் வள்ளுவப் பெருந்தகை அதற்கு அற்புதமான பொருள் கூறியிருக்கிறார். அது என்னவென்றால் ''பிறன் மனை நோக்காப் பேராண்மை'' என்கிறார். அது எப்படி ? கண்ணுன்னு இருந்தா பார்க்கத்தான் செய்வாங்க என்று எதிர் கேள்வியை வீசுபவர்கள் உண்டு. பார்க்கலாம், ஆனால் தவறான நோக்கத்தோடு பார்க்கக் கூடாது. உங்கள் நோக்கங்கள் மாறும் போது உணர்வுகள் மாறும். தவறான உணர்வுகள் எழும் போது உடலில் ஒவ்வாத இராசயன மாற்றங்கள் நிகழும். அது நம் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்பைத் தந்து விடும். பிறன் மனைவி மேல் ஆசைப் பட்டு, அவளை அடைய வேண்டும் என எண்ணும் போது அது வெறியாக மாறிவிடும். அது காம வெறி. நம் மனைவியோடு ஏற்படும் போது அந்த உணர்வு நம் உடலை பாதிப்பதில்லை. அது இணக்கமான உறவு, உணர்வு. இப்படித் தவறான நோக்கத்தோடு பிற பெண்கள் மீது ஆசைப்படும் குற்றத்தையே ராகம் என்கிறார்கள். இந்தக் குற்றத்தின் பிடியில் சிக்கியவன் பகை, அச்சம், பாவம் போன்றவற்றால் அழிவான். அழிந்தாலும் பரவாயில்லை அடைந்தே தீருவேன் என்ற நிலைக்கு மனதை இந்த குற்றம் தள்ளிவிடும். இதற்கு புராணங்களில் இந்திரன் இராவணன் என்று பல உதாரணங்கள் காட்டப்பட்டுள்ளன.
காமம் - இது போதும் என்ற மனம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் குற்றமாகும். மனமானது ஆசையைத் தூண்டிவிடும். திருப்தியே ஏற்படாது. இந்தப் பற்றானது மனதின் தூய்மையைக் கெடுக்கும். இதன்பிடியில் சிக்கிச் சீரழிந்தவர்கள் கோடி. சாதகர்களுக்கு இந்த குற்றம் பேரிடரைத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன்பாற் பட்டவன் மீள்வது கடினம்.
துவேஷம் - காரணமே இல்லாமலோ அல்லது ஏதோ ஒரு காணரத்திற்காகவோ மற்றவர்கள் மேல் இடைவிடாமல் வெறுப்பைக் காட்டும் குற்றமாகும். இதனால் பல கொடிய செயலைச் செய்ய மனம் தூண்டிவிடும். பிறர் மேல் நாம் காட்டும் துவேஷம்உணர்வுகள் வாயிலாக நம் வாழ்வை கடுமையாக பாதிக்கும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.
குரோதம் - இது தீராத பகை, இதனால் கொள்ளும் நீண்ட சினம். மகாபாரதத்தில் இந்த குற்றம் உள்ளவர்கள் அனைவரும் அழிந்ததாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது மனதின் மிக மோசமான ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. மனதில் இந்த குற்றம் உள்ளவன் அழிவது உறுதி.
உலோபம் - இதைக் கஞ்சத்தனம் என்பார்கள். உதவும் மனம் இல்லாமல் போவதால் இது ஒரு வகை சுயநலப் போக்கே. நாய் கையில் கிடைத்த தேங்காய் போல் இந்த குணம் உள்ளவன் கையில் கிடைக்கும் பொருளும் அழியும் அவனும் அழிவான். இந்தக் குற்றம் உள்ளவன் கருணை, அன்பு போன்ற நற்குணங்கள் இல்லாத கடின சித்தம் உடையனாக இருப்பதால் இவன் சாதகன் என்ற நிலைக்கே தகுதியானவன் இல்லை.
மோகம் - ஒருகுறிப்பிட்ட பொருளின் மீதோ, உறவுகள் மீதோ, விலங்குகள் மீதோ கொள்ளும் ஆசாபாசம். அது எதன் மீது வேண்டுமானாலும் அமையலாம். இது ஆன்மிக முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக அறிவுருத்தப்பட்டுள்ளது.
மதம் - இதை கர்வம், செருக்கு என்றும் சொல்வார்கள். இதனால் பிறரை மதிக்கும் குணத்தை மனம் இழந்து விடுகிறது. தானே உயர்ந்தவன் என்கிற மனப் போக்கு வந்து விடுகிறது. மதம் பிடித்தவன் தன் சிந்தனா சக்தியை இழந்து விடுவான் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாற்சரியம் - பிறருடைய முன்னேற்றம் கண்டு பொறாமைப்பட்டு அவர்களுக்கு கேடு நினைக்கும் ஒரு குற்றமாகும். இக்குற்றம் மனதில் கொண்டவன் அழிவது உறுதி.
இரட்சியம் - இது தான் பெற்ற துன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என நினைக்கும் கேவலமான ஒரு மனக் குற்றமாகும். இந்தக் குற்றம் உள்ளவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும்.
அசூயை - இதற்கு இரண்டுவிதமான விளக்கங்கள் காணப்படுகின்றன. தான் அனுபவிக்கும் ஒன்றை மற்றவர்கள் எவரும் அனுபவிக்கக் கூடாது என்கிற ஒரு குணம் என்றும் ஒன்றைப் பார்த்தவுடன் முகம் சுளிப்பது என்பது இந்த இரண்டு குற்றங்களுமே அசூயைதான். இது பொறாமை, ஆசை, சுயநலம் சார்ந்ததல்ல. பிறரை அருவருப்பாக எண்ணும் ஒரு மனப் போக்கு.
டம்பம் - இது பகட்டு. பேச்சிலும், செயலிலும் மற்றவர்களை விட தானே சிறந்தவன் என்று அலட்டிக் கொள்ளும் மனப் போக்கு. பிறர் தம்மை புகழ வேண்டும் என்பதற்காக அதிகம் அலட்டிக் கொள்வது. ஆடம்பரமாகக் காட்டிக் கொள்வது. இதுவும் ஒருவகை மனக் குற்றமாகவே கருதப்படுகிறது.
தர்ப்பம் - இது ஒரு வகையான அதிகப்படியான தன் முனைப்பு என்று கூடச் சொல்லலாம். தானே பெரிய வீரன் என்கிற ஒரு எண்ணம் தோன்றுவதால் பிறரை குறைவாக எண்ணும் மனக்குற்றம். இந்த எண்ணம் அழிவைத்தான் தரும். மற்றவர்கள் பலத்தை எடைபோடத் தெரியாமல் போய்விடும்.
ஆங்காரம் - இதுவும் அதே நிலையை ஒத்ததுதான். இதில் மதம், தர்ப்பம், கோபம் எல்லாம் கூடிய ஒரு நிலை. இறுமாப்பு கூடிய நிலை. இந்த நிலை மிகக் கொடியது. யோக சாதகர்களுக்கு, தியான ஒழுக்கம் கடை பிடிப்பவர்களுக்கு இந்தக் குற்றங்கள் யாவும் பெரும் தடைகளே. மன ஒருமைப்பாடு நீடித்திருப்பதே முக்கியம். மனம் சலனமடைய இந்த த் தடைகள் காரணமாகி விடுகின்றன. கவனம் சிதறிவிட்டால் மீண்டும் கவனம் கொண்டுவரத் தாமதமாகும்

No comments:

Post a Comment